மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்

மின் துறையில்  தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்:  முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (23.9.2026) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்குச் சென்று, மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் நுகர்வோர் சேவைகள் தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தமிழகத்தின் தற்போதைய மின் தேவை, உற்பத்தி நிலவரம், புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரம், மின் தேவை மற்றும் கிடைப்புத் திறனுக்கிடையேயான இடைவெளி உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையால் ஏற்படும் தாக்கம், மின்சாரப் பரிமாற்றச் சந்தையில் இருந்து தேவையான அளவு மின்சாரத்தைப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள், நிலக்கரி கிடைப்பதில் உள்ள சவால்கள், அதிக செலவு கொண்ட எரிவாயு மின் உற்பத்தி மற்றும் மத்திய மின் நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத உற்பத்தித் தடைகள் குறித்தும் விளக்கப்பட்டது. அடுத்த ஆண்டு கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடிய மின் தேவையை முன்கூட்டியே கணித்து, அதை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விரிவான செயல் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மாநிலத்தின் மின் விநியோகத்தில் உள்ள பழைய கட்டமைப்புகள், முக்கிய மின் தடைகள், அதிகரிக்கும் மின் சுமையால் ஏற்படும் வலையமைப்பு நெரிசல், மின் விநியோகத் தரத்தை பாதிக்கும் காரணிகள், மழை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் ஏற்படும் பாதிப்புகள், களப்பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை சமாளிக்கும் வகையில் கூடுதல் மின்மாற்றிகள் மற்றும் புதிய மின் பாதைகள் அமைத்தல், அதிக சுமையுள்ள மின் வலையமைப்புகளை மேம்படுத்துதல், பழைய உபகரணங்களை மாற்றுதல் மற்றும் மின் தடைகளை விரைவாக சரிசெய்வதற்கான களப்பணிகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின்சாரத்தை வழங்குவதுடன், மின் நுகர்வோர் சேவைகளையும் மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணுதல், சேவை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வோர் சேவைகளை டிஜிட்டல் முறையில் எளிதாக்குதல் தொடர்பான எதிர்கால திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன. SLDC, SCADA மையங்களில் ஆய்வு தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் செயல்படும் மாநில மின்பளு பகிர்வு மையமான SLDC-ஐ முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மாநிலம் முழுவதும் மின் உற்பத்தி, மின் கொள்முதல், மின் தேவை மற்றும் விநியோக நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்து, மின் சுமையை சமநிலைப்படுத்தும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல், சென்னை மின் விநியோகக் கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு மையமான SCADA Control Centre-ஐயும் பார்வையிட்டார். சென்னை மாநகரின் மின் விநியோக நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணித்தல், மின் சுமையை நிர்வகித்தல், மின் தடைகளை கண்டறிதல் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர். இதைத்தொடர்ந்து, 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அழைப்புகள், புகார்கள் பதிவு செய்யப்படும் முறை, அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படுவது, புகார்களின் நிலை கண்காணிப்பு மற்றும் தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. மின் தடை, சீரற்ற மின்னழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், மின்சார விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார். சூரிய மின் அமைப்புகள், BESS திட்டங்களுக்கு முக்கியத்துவம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ஒன்றிய அரசின் மானியத்துடன் தமிழக அரசு அறிவித்துள்ள 3 கிலோவாட் வரை ரூ.1 லட்சம் வரையிலான கூடுதல் மானியத் திட்டத்தை பயன்படுத்தி, வீடுகளில் மேற்கூரை சூரிய மின் அமைப்புகளை நிறுவ பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். மின் சேமிப்பு மற்றும் மின் தேவையை சீராக நிர்வகிக்க BESS எனப்படும் Battery Energy Storage System கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். மேலும், மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதுடன், தமிழகம் முழுவதும் SCADA மூலம் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தரவு சேகரிப்பு வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நடைபெற்று வரும் மின் உற்பத்தித் திட்டங்களை திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றவும், மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான மின் பரிமாற்றம் மற்றும் விநியோகக் கட்டமைப்பை ஒருங்கிணைத்து, தமிழகத்தை மின் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் அணில் மேஷ்ராம், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வி. அருண் ராய் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.