மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு செயல்படும்: டெல்லியில் அமைச்சர் கீர்த்தனா உறுதி
டெல்லியில் தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு மற்றும் அமலாக்க அறக்கட்டளையின் 3-வது உயர்மட்ட கண்காணிப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் முன்னிலை வகித்தார். பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் வழித்தடத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்துவதுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை தொழில் மையங்களுடன் இணைப்பதற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். குறிப்பாக, சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தடத் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், வழித்தடத்தில் அமைந்துள்ள பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், தொழில் மையங்களுக்கு இடையிலான சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம் புதிய முதலீடுகள், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சென்னை-தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டத்துக்கான முன்மொழிவு கடந்த 2014-ம் ஆண்டிலேயே செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு போதிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.இதற்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, உத்தேச தொழில் வழித்தடம் தொடர்பாக சாத்தியக்கூறு மற்றும் பாதை ஆய்வுகளை மேற்கொள்வதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் முறையான கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.