முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து
லண்டனில் முதல் - அமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை நிறுவி விரிவுபடுத்துவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீட்டு முன்மொழிவுகள் மற்றும் உறுதிமொழிகள் மூலம் மாநிலத்தில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முதல-அமைச்சர் விஜய் முன்னிலையில் (14.9.2026) நேற்று இங்கிலாந்து, லண்டனில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனத்திற்கும், முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஒரு உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து அக்குழுமத்தினர் தமிழ்நாடு முதல்-அமைச்சரை சந்தித்து விளக்கிக் கூறினர். 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மையர்களுடன் (Joint Venture & Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன. பிரிட்டனைத் (UK) தலைமையிடமாகக் கொண்ட, திறன்மிக்க மின்மாற்றிகளைத் தயாரிக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் தனது மின்மாற்றி உற்பத்திப் பணிகளின் அடுத்தகட்டத்திற்காக ரூ.300 கோடி முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த ஆலை, மேம்பட்ட மின் மற்றும் விநியோக மின்மாற்றி உற்பத்தியில் தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதோடு, உள்ளூர் மதிப்புக் கூட்டலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்கட்டமைப்பு உபகரணங்கள் உற்பத்திக்கான ஒரு முன்னணி மையமாகத் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும். தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் (Guidance TamilNadu) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் (Ernst & Young) ஒரு சர்வதேச நிறுவனத்திற்காக, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (Global Capability Centre) அமைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. 'கட்டு-இயக்கு-மாற்றியமை-மாற்று' (Build-Operate-Transform-Transfer - BOTT) ஏற்பாட்டின் கீழ், இந்த மையத்தை நிறுவுவதற்கும், அதன் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனம் ஆதரவளிக்கும்.