Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் விரிவாக்கம்: முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகம் முழுவதும் பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கம் இன்று தொடங்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான கட்டணமில்லா ‘விடியல் பயணம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஆட்சி அமைந்தால் மகளிர் இலவச பயணத் திட்டம் அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. த.வெ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்-அமைச்சர் விஜய், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பயன்பெற பெண்களுக்கு வருமான வரம்போ அல்லது பயண எண்ணிக்கை கட்டுப்பாடோ கிடையாது. மேலும், ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பிற வகை பேருந்து சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. திருநங்கைகளும் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும் என அரசு மதிப்பிட்டுள்ளது. தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர்ப்புற சாதாரண பேருந்துகளிலும், 40 கி.மீ.

Advertisement
வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில், விரிவுபடுத்தப்படும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புற எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு அதிகமான தொலைவு செல்லும் மலைப்பகுதி சாதாரண பேருந்துகளும் கொண்டுவரப்படுகின்றன. மொத்தம் 18,413 பேருந்துகளை 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் நிலையில், அவற்றில் 12,695 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் தினசரி 1 லட்சத்து 68 ஆயிரத்து 500 நடைகள் இயக்கப்பட உள்ளன. இதனால் நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடன் (இ.டி.எம்.) இணைக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் நிறைவடைந்தன. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 27-ந்தேதி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் முதல்-அமைச்சர் விஜய் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெண்கள் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் இலவச அரசு பேருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,640
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு