மகளிர் ஆக்கி உலகக் கோப்பை 2026: போராட்டங்களை வென்று உலக அரங்கில் இந்தியா – ஒரு பார்வை
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து இணைந்து நடத்தும் 2026 மகளிர் ஆக்கி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உலகக் கோப்பை மேடையை எட்டிய இந்திய அணியின் பயணம் கவனம் ஈர்த்துள்ளது.2025 மகளிர் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும், போட்டியை நடத்திய சீனாவிடம் தோல்வியடைந்ததால் உலகக் கோப்பைக்கான நேரடி தகுதி வாய்ப்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் இழந்தது. அந்த ஏமாற்றத்தை பின்னுக்குத் தள்ளிய இந்திய வீராங்கனைகள், அடுத்த வாய்ப்பை இலக்காகக் கொண்டு தீவிரமாக தயாரானனர்.பின்னர் ஐதராபாத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா முழுத் தொடரிலும் தோல்வியறியாமல் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியை எட்டியது. அரையிறுதியில் இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை நுழைவை உறுதி செய்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாலும், உலகக் கோப்பை இடத்தை வெற்றிகரமாகப் பெற்றது.அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற நேஷன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்று தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியது.அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த இந்தியா, அசத்தலான மீள்பிரவேசத்துடன் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.