பூமியைப் போலவே பிரபஞ்சத்தில் ஏராளமான கிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். அந்தக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல், வேற்றுகிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுகள் (UFO) தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும், அவற்றுக்கு இதுவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது, வானில் பறக்கும் தட்டுகள் தென்படுவதாக அவ்வப்போது வெளியாகும் தகவல்கள் குறித்தும், அவை தொடர்பாக அரசிடம் ஏதேனும் அதிகாரப்பூர்வ விவரங்கள் உள்ளனவா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், இதுபோன்ற விஷயங்களில் தனக்கு அதிக நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும், அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த சில அதிகாரிகளுடன் ஒருமுறை உரையாடியபோது, அவர்கள் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அந்த அதிகாரிகள் சதிக் கோட்பாடுகளைப் பேசுபவர்கள் அல்ல.
Advertisement
அவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த சிறந்த விமானிகள். ஒருமுறை எப்-22 (F-22) போர் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, வானில் ஒரு பறக்கும் தட்டைப் பார்த்ததாக என்னிடம் தெரிவித்தனர். உலகின் மிகச்சிறந்த போர் விமானங்களில் ஒன்றான எப்-22-ஐ விட அந்தப் பறக்கும் தட்டு சுமார் மூன்று மடங்கு வேகத்தில் சென்றுள்ளது. மேலும், வழக்கமான விமானங்களைப் போல இல்லாமல் வட்ட வடிவில் அது காணப்பட்டதாகவும் விமானிகள் கூறினர்” என்றார். ஆனால், இந்த அனுபவத்தைத் தன்னிடம் பகிர்ந்து கொண்ட விமானப்படை அதிகாரிகள் யார் என்ற விவரத்தை டிரம்ப் வெளியிடவில்லை. தொடர்ந்து, அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் பறக்கும் தட்டுகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெறுவதாகக் கூறப்படுவது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அத்தகைய நடவடிக்கைகள் நடைபெறுவதாகத் தனக்குத் தெரியாது என்று மறுத்த டிரம்ப், ஒருவேளை ரகசியமாக ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தால், பேட்டி முடிந்ததும் அது குறித்து விசாரித்து உண்மையைக் கண்டறிவேன் என்றும் தெரிவித்தார்.