சென்னை அருகே போரூரில் தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து, மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் கவுதமன். இவரது மகன் சிவ சூர்யா (23). இருவரும் இன்று (புதன்கிழமை) போரூரில் உள்ள தனியார் உள்விளையாட்டு அரங்கில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிவ சூர்யா திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கவுதமன் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Advertisement
ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே தீவிர மாரடைப்பு ஏற்பட்டு சிவ சூர்யா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மகனின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவுதமன், அவரை கட்டியணைத்து கதறி அழுதார். தந்தையின் கண் முன்னிலேயே மகன் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.