பெரியார் பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு: விண்ணப்பிக்க 28-ந் தேதி வரை அவகாசம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெரியார் தொலைநிலைக்கல்வி நிறுவனம் தற்போது தொலைநிலை மற்றும் இணையவழிக் கல்வி மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் தொழிற்சாலைப் புரிந்துணர்வு திட்டத்தின் மூலம் சேர்க்கை பெற்று இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை முடித்த மாணவர்களில், படிப்புக் காலம் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாகியும் அரியர் வைத்திருப்பவர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் நிலுவையில் உள்ள பாடங்களுக்கான தேர்வை எழுத முடியும்.2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு படித்த மாணவர்கள், தாங்கள் ஏற்கனவே படித்த பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே அரியர் தேர்வை எழுதலாம். சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன், ஒவ்வொரு பாடத்தாளுக்கும் கூடுதலாக ரூ.2 ஆயிரம் சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும்.இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் கடந்த மாதம் 15-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் அவகாசம் வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சிறப்புத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் [www.periyaruniversity.ac.in](http://www.periyaruniversity.ac.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை அரியர் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தெரிவித்துள்ளது.