ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாள்வு: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதனை துறைமுக ஆணையப் பொறுப்பில் உள்ள சுசாந்தகுமார் புரோஹித் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 5-ம் தேதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 631 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டதே வ.உ.சி. துறைமுகத்தின் அதிகபட்ச சாதனையாக இருந்தது.புதிய சாதனை நாளில் 62,466 டன் நிலக்கரி, 49,067 டன் அனல்மின் நிலக்கரி, 20,671 டன் சுண்ணாம்புக்கல், 10,188 டன் கந்தக அமிலம், 5,400 டன் பாமாயில், 1,771 டன் சர்க்கரை ஆகியவை கையாளப்பட்டுள்ளன. இதுதவிர, 774 டன் பொது சரக்குகள், 68 டன் காற்றாலை இறக்கைகள் மற்றும் 66,927 டன் சரக்குப் பெட்டக சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன.சரக்கு கையாள்வில் தொடர்ந்து வளர்ச்சி 2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வ.உ.சி. துறைமுகத்தில் 35.35 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் கையாளப்பட்ட 32.33 லட்சம் டன் சரக்குகளுடன் ஒப்பிடும்போது, இது 9.36 சதவீத வளர்ச்சியாகும்.மேலும், 2026 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் மொத்தம் 18.27 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.