அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 39 வயதான நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சி, 21 ஆண்டுகளாக நீடித்த தனது சர்வதேச கால்பந்து பயணத்தை சமீபத்தில் முடித்துக் கொண்டார். அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 207 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி, 125 கோல்களை பதிவு செய்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களில் (34) பங்கேற்ற வீரர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது. மெஸ்சி திடீரென சர்வதேச ஓய்வை அறிவித்ததால், சொந்த மண்ணில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் லயோனல் ஸ்காலோனி மற்றும் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் வலியுறுத்தலை ஏற்று, உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் மேலும் ஒரு சர்வதேச போட்டியில் விளையாட மெஸ்சி சம்மதித்துள்ளார். இதையடுத்து, அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி பியூனஸ் அயர்சில் நடைபெறவுள்ள நட்புறவு ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க நாடான பெனின் அணியை எதிர்கொள்கிறது.
Advertisement
இந்தப் போட்டிக்கான அர்ஜென்டினா அணியில் மெஸ்சியும் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெஸ்சிக்கு மீண்டும் ஒருமுறை விளையாடும் வாய்ப்பை வழங்கி, அக்டோபர் 6-ந்தேதி அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2022-ம் ஆண்டு கத்தார் உலகக் கோப்பையில் மெஸ்சியுடன் இணைந்து விளையாடிய உலக சாம்பியன் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மெஸ்சியின் சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பு அர்ஜென்டினா ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளதாகவும், இந்தப் போட்டி அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.