திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் சேகரிப்பை விரிவுபடுத்தவும், பழமையான பண்பாட்டு மரபுகளைப் பாதுகாக்கவும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் உள்ள அரிய பொருட்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரலாற்றுச் சான்றுகளையும் முன்னோர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாப்பதில் அரசு அருங்காட்சியகம் முக்கியப் பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறையினர் தமிழகத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு சிறப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருக்கும் பழங்கால நாணயங்கள், சிலைகள், ஓலைச்சுவடிகள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட அரிய பொருட்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இவ்வாறு பழமையான அரும்பொருட்களை வழங்க முன்வருபவர்களுக்கு அவற்றின் மதிப்புக்கேற்ப உரிய வெகுமதி அல்லது மதிப்பூதியம் வழங்க அரசு அருங்காட்சியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பழங்கால அரும்பொருட்களை வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், அவற்றை விருப்பமிருந்தால் அன்பளிப்பாகவோ அல்லது உரிய வெகுமதியை பெற்றுக்கொண்டோ ஒப்படைக்கலாம்.பொருட்களை ஒப்படைக்க விரும்புவோர், “காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி” என்ற முகவரியை தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.