பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை: அரசு விடுதி ஊழியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அரசு மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்த 2 பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து, தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதி தூய்மை பணியாளர் மற்றும் அவரது நண்பரான கார் டிரைவர் ஆகிய இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.சேலம் மாவட்டத்தில் சமீபகாலமாக சிறுமிகள் தொடர்பான பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு கொண்டலாம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் வாழப்பாடியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.வாழப்பாடியில் அரசு பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காக விடுதி செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் அங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.இந்த விடுதியில் தூய்மை பணியாளராக ராதிகா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரகுபதி கார் டிரைவராக உள்ளார். இருவரும் நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரகுபதியுடன் செல்போனில் ராதிகா பேசிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த 2 பள்ளி மாணவிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து அந்த மாணவிகள், ராதிகாவின் செல்போன் மூலம் ரகுபதியிடம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.கடந்த 8-ந் தேதி இரவு ரகுபதி, ராதிகாவிடம் பீர் பாட்டில் மற்றும் சில்லி சிக்கன் கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் ராதிகா, அந்த 2 மாணவிகளுடன் சேர்ந்து இரவில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில் அங்கு வந்த ரகுபதி, தனது மோட்டார் சைக்கிளில் 2 மாணவிகளையும் அழைத்துக்கொண்டு தனிமையான இடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.பின்னர் மாணவிகளை மீண்டும் விடுதிக்கு அழைத்து வருமாறு ராதிகா தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்களை விடுதியில் விட்டுவிட்டு ரகுபதி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் உடனடியாக யாரிடமும் தெரிவிக்கவில்லை.இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விடுமுறையையொட்டி மாணவிகள் தங்களது வீடுகளுக்கு சென்றனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இனி பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், மாணவிகள் விடுதியில் பணியாற்றிய தூய்மை பணியாளர் ராதிகா நேற்று மதியம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.மேலும், மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்து பாலியல் தொல்லை அளித்ததாக ரகுபதி மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து நேற்று நள்ளிரவில் ரகுபதியையும் போலீசார் கைது செய்தனர்.ராதிகா மற்றும் ரகுபதி ஆகியோர் வேறு மாணவிகளுக்கும் மது கொடுத்தார்களா, மேலும் யாரேனும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.