நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 734 ஆக உயர்வு:
போடேகோஷி ஆற்றில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிப்பு நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து போடேகோஷி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மத்திய நேபாளத்தின் பல பகுதிகள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தன. நேற்று வரை 600-க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழப்பு 734 ஆக உயர்ந்துள்ளது.இடிபாடுகள் மற்றும் சேற்றில் இருந்து மீட்கப்படும் உடல்கள் மருத்துவமனை பிணவறைகளில் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதனால், புதிதாக மீட்கப்படும் உடல்களைப் பாதுகாப்பாக வைக்க இடமின்றி மருத்துவமனை நிர்வாகங்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. இதையடுத்து பல இடங்களில் தற்காலிக பிணக்கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3,000-க்கும் மேற்பட்டோரின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அஞ்சுகின்றனர். மாயமானவர்களில் தமிழர்கள் உள்ளிட்ட 167 இந்தியர்களும் இருப்பதால் இந்தியாவிலும் சோகமான சூழல் நிலவுகிறது.வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்று 5-வது நாளாகவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரவு பகலாக நடைபெறும் இந்த நடவடிக்கையில் நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 5,000 வீரர்கள் உள்பட 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களும் மீட்புப் பணிகளில் இணைந்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் மூலம் நேற்றுவரை4,451பேரமீட்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், போடேகோஷி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது. இதையடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இமயமலைப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது மத்திய நேபாளப் பகுதிகளுக்கு மிகப்பெரிய அளவில் நீரை கொண்டு சென்றது.நேபாளத்தில் உள்ள சுரங்கங்களில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகவும், 100-க்கும் அதிகமான நீர்மின் நிலையப் பணியாளர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்பதற்காக இந்தியா மற்றும் சீனா சார்பில் சிறப்பு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
பேரிடரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைப்பதற்கும், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நேபாளத்திற்கு பில்லியன் கணக்கில் நிதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் உதவிகளைப் பெறும் முயற்சியையும் நேபாளம் மேற்கொண்டு வருகிறது.பனிப்பாறை சரிவுக்கும் தற்போதைய பேரிடருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தியாவும் பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேபாளத்திற்கு சர்வதேச அளவில் உதவிகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை உள்ளிட்டவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கான நிதியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. சீனாவும் நேபாளத்திற்கு உதவ முன்வந்துள்ளது.