Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

நீர்நிலைகள் புனரமைப்பில் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ‘ஏரி’ இணையதளம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

நீர்நிலைகள் புனரமைப்பில் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ‘ஏரி’ இணையதளம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், ‘ஏரி’ என்ற புதிய இணையதளத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நீர்நிலைகள் சீரமைப்புப் பணிகளுக்கான தடையின்மைச் சான்றிதழ்களை இணையவழியிலேயே பெற முடியும். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில், நீர்வளத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஏரி’ இணையதளத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்ட அரசுசாரா அமைப்புகளுக்கு தடையின்மைச் சான்றிதழ்களையும் வழங்கினார். கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் நீர்நிலைகளைச் சீரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், பல்வேறு அரசுத் துறைகளிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து, சான்றிதழ்களை எளிதாகப் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் முன்வைத்திருந்தனர். இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில் ‘ஏரி’ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து அரசுத் துறைகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான நீர்நிலைகள் தொடர்பான தகவல்கள் இந்த இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளை வலுப்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட சிறிய அளவிலான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement
இதனால் நீர்நிலைகளின் நீர் சேமிப்புத் திறன் மற்றும் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கும். இதுவரை நேரடியாக விண்ணப்பித்து சான்றிதழ் பெறும் நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது இணையதளம் மூலம் வெளிப்படையான விண்ணப்பம் மற்றும் பரிசீலனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் தடையின்மைச் சான்றிதழ் வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும். டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், CSR நிதி மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளின் ஈடுபாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விண்ணப்பங்களை ஆய்வு செய்தல், ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் ஆகிய பொறுப்புகளுக்காக மாநில நீர்வள மேலாண்மை முகமையின் (SWaRMA) தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள சிறுதுளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Environmental Foundation of India), எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை (Exnora International Foundation), மெகா அறக்கட்டளை (Mega Foundation), தானம் அறக்கட்டளை (Dhan Foundation) ஆகிய ஐந்து அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் தடையின்மைச் சான்றிதழ்களை வழங்கினார். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு