“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” – தமிழ்நாடு அரசு
காவிரி டெல்டா மாவட்டங்களில் 2026-27-ம் ஆண்டுக்கான சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பாசனத் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு படிப்படியாக முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒவ்வொரு கனஅடியும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது, அனுமதியின்றி நீர் எடுப்பது, அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தண்ணீர் எடுப்பது உள்ளிட்ட செயல்கள் கடுமையாகத் தடுக்கப்படும்.இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இரவு பகலாக ரோந்து மேற்கொள்ளும்.காவிரி நீர் என்பது காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமை என அரசு தெரிவித்துள்ளது.