“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” – தமிழ்நாடு அரசு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” – தமிழ்நாடு அரசு

“நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.. கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்..” – தமிழ்நாடு அரசு

காவிரி டெல்டா மாவட்டங்களில் 2026-27-ம் ஆண்டுக்கான சம்பா சாகுபடி மற்றும் காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து இன்று (செப். 1) தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தண்ணீர் திறப்பை தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரிப் படுகைப் பகுதிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாகவும், நீர் இருப்பு 54.452 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,857 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பாசனத் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு படிப்படியாக முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளன.மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் ஒவ்வொரு கனஅடியும் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது, அனுமதியின்றி நீர் எடுப்பது, அனுமதிக்கப்பட்ட நீரேற்றுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தண்ணீர் எடுப்பது உள்ளிட்ட செயல்கள் கடுமையாகத் தடுக்கப்படும்.இதற்காக நீர்வளத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இரவு பகலாக ரோந்து மேற்கொள்ளும்.காவிரி நீர் என்பது காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ உரிமை என அரசு தெரிவித்துள்ளது. இந்த உரிமையில் எந்த நிலையிலும் சமரசம் செய்யப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும், டெல்டா விவசாயிகளின் உரிமையையும் பாதுகாக்க உச்சநீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவில் கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தி சம்பா சாகுபடியை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.எனவே, விவசாயிகள் குறைந்த நீர் தேவைப்படும் மத்திய கால நெல் ரகங்களைத் தேர்வு செய்யவும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர்ச் சிக்கன சாகுபடி முறைகளைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.“நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிபெறச் செய்வோம்”என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ந.ஆனந்த், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் சோ.லட்சுமணன், கா.சிவக்குமார், மே.ச.பழனிவேல், நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஏ.ஜெயகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.