நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் வித்தியாசமான போராட்டம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்தே இரு அவைகளிலும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, மேலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவை கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளின் முழக்கங்களும் போராட்டமும் நீடித்ததால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நாள் முழுவதும் செயல்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.இதற்குமுன், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் நூதனமான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டை கவனத்திற்கு கொண்டு வருவதற்காக, ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பிக்கள் உண்டியல்களில் பணம் செலுத்தி கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், ராமர் கோவில் நன்கொடை முறைகேடு குறித்து வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.