கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தோவாளை மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய மலர் விற்பனை மையமாக விளங்கும் தோவாளை சந்தைக்கு தினமும் டன் கணக்கில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மலர் தோட்டங்களில் பூக்களைப் பறிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பூக்களின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.
Advertisement
பூக்களின் வரத்து சரிந்துள்ளதால், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி அவற்றின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி, கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூவின் விலை கிலோ ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பூக்களின் விலை திடீரென உயர்ந்திருப்பது சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.