தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கு: பாலியல் வன்கொடுமை முயற்சிக்குப் பிறகு சுத்தியலால் தாக்கிய மீனவர் கைது
தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த 56 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற பின்னர், சுத்தியலால் தலையில் தாக்கி கொலை செய்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி (56), கணவரால் பிரிந்து தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்வாதாரம் நடத்தி வந்த அவர், கடந்த 15ஆம் தேதி மகள் வெளியூருக்கு சென்றிருந்ததால் வீட்டில் தனியாக இருந்தார். அந்த இரவு வீட்டின் முன்புற திண்ணையில் உறங்கியிருந்த முத்துலட்சுமியை, மறுநாள் காலை அக்கம்பக்கத்தினர் தலையில் கடுமையான காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கண்டனர். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, குற்றவாளியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளி கைது செய்யப்படும் வரை உடலைப் பெற மறுப்பதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.