நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன. இவ்வாறு பெறப்படும் நன்கொடைகள் குறித்த விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் நிதியுதவி அளித்து வருகின்றன. அந்த வகையில், 2025-26ஆம் நிதியாண்டில் திமுகவுக்கு டைகர் அசோசியேட்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் ரூ.125 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் தலைவராக சுபயன் நாகராஜன் உள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் நெருங்கிய கூட்டாளி ஆவார். மார்ட்டினும் நாகராஜனும் மற்றொரு நிறுவனத்தில் கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
Advertisement
திமுகவைத் தொடர்ந்து, அதிமுகவும் இதே நிறுவனத்திடம் இருந்து 2025-26ஆம் நிதியாண்டில் ரூ.135 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதன் மூலம், டைகர் அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து இரு கட்சிகளும் சேர்த்து மொத்தம் ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, 2025-26ஆம் நிதியாண்டில் திமுக ரூ.191 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில் அதிமுகவுக்கு கிடைத்த மொத்த நன்கொடை ரூ.161 கோடியாகும். முந்தைய 2024-25ஆம் நிதியாண்டில் திமுக ரூ.365 கோடி நன்கொடை பெற்றிருந்தது. ஆனால், 2025-26ஆம் நிதியாண்டில் இந்தத் தொகை ரூ.191 கோடியாகக் குறைந்துள்ளது.