வெற்றிச்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள **‘தி கிராண்ட் மாஸ்டர்’** திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர்கள் ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் மறைந்த இயக்குநர் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் மற்றும் அவர்களின் கனவுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளராக பணியாற்றி குடும்பத்தை நடத்தும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சிறந்து **கிராண்ட் மாஸ்டர்** ஆக வேண்டும் என்ற கனவுக்கு உறுதுணையாக இருக்கிறார். வறுமை உள்ளிட்ட பல்வேறு தடைகளை எதிர்கொண்டு, மகனின் லட்சியத்தை நிறைவேற்ற அந்தத் தாய் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் முக்கியக் கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, சமூகத்தின் மற்றொரு பக்கத்தைப் பதிவு செய்யும் படைப்பாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சதுரங்கக் கட்டங்கள் பின்னணியாக இடம்பெற்றுள்ளன. தாய் மற்றும் மகன் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். கையில் செஸ் காயுடன் சிறுவன் நம்பிக்கையோடு மேல்நோக்கிப் பார்க்கும் நிலையில், தாய் கவலையும் வலியும் நிறைந்த பார்வையுடன் காணப்படுகிறார். அவர்களைச் சுற்றி செஸ் காய்கள் நகரும் காட்சியும், போஸ்டரின் கீழ்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் செல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இவை படத்தின் போராட்டத்தையும் மகனின் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. திண்டுக்கல், மதுரை, தடா, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.