காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
காதல் உறவில் ஏற்பட்ட துரோகம் தன்னை மனதளவில் கடுமையாகப் பாதித்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘செக்சன் 108’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்துக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வரும் ரெஜினா, பிரபல இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் ‘தி வைவ்ஸ்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், துரோகம் மற்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது தனது காதல் உறவு 2020-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அனுபவம் தன்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்தார். காதல் உறவில் கடுமையாக ஏமாற்றப்பட்டதால் மனதளவில் முற்றிலும் சோர்ந்து போனதாகவும் கூறினார்.
மேலும், அந்தத் துரோகத்திற்குப் பிறகு சில காலத்திற்கு எந்தவொரு காதல் உறவிலும் ஈடுபட வேண்டாம் என முடிவு செய்ததாகவும், தனது நேரத்தையும் கவனத்தையும் தனக்காகவே செலவிட விரும்பியதாகவும் தெரிவித்தார்.