தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்
தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அக்கட்சிக்கு விசில் சின்னமும்ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள், தவெக தனது முதல் தேர்தலை சந்தித்து 1.8 கோடி வாக்குகளைப் பெற்றதுடன், 35 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியையும் கைப்பற்றியது. இதன் மூலம் குறுகிய காலத்திலேயே மாநில கட்சி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அதேபோல், தேசிய கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவாகும் மொத்த வாக்குகளில் குறைந்தது 6 சதவீதத்தை பெறுவதுடன், ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களில் இருந்து குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.