வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து வலுவடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி, நாளை (திங்கட்கிழமை) புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். இதையடுத்து, வரும் 28-ம் தேதி (புதன்கிழமை) காலை ஆந்திர கடலோரப் பகுதிக்கு அருகே மத்திய மேற்கு வங்கக்கடலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
Advertisement
இந்நிலையில், தற்போது கடந்த 3 மணி நேரமாக தாழ்வு மண்டலம் எந்த நகர்வும் இன்றி ஒரே இடத்தில் நீடித்து வருகிறது. விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 880 கி.மீ. தொலைவில் இது மையம் கொண்டுள்ளது. முன்னதாக, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யவும், பலத்த சூறாவளிக் காற்று வீசவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.