தமிழ்நாட்டின் நலனுக்காகத்தான் மேகதாது அணை: கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவக்குமார்
மேகதாது அணை தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டே கட்டப்படுவதாக கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கர்நாடகாவின் தேவைக்காக மட்டும் உருவாக்கப்படவில்லை என்றும், அதன் மூலம் கர்நாடகா சுமார் 5 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் என்றும் கூறினார்.பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே அணை கட்டப்படுவதாக தெரிவித்த சிவக்குமார், அணை அமைக்கப்பட்ட பிறகு குடிநீர் தேவைக்காக 5 டி.எம்.சி. நீரை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள நீர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வழங்கப்படும் என்றார்.முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டிலும் சிவக்குமார் இதுகுறித்து பேசியிருந்தார்.
மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழ்நாட்டுக்கே அதிக பலன் கிடைக்கும் என்றும், அணையில் சேமிக்கப்படும் நீரின் ஒவ்வொரு சொட்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு பயன்படும் என்றும் அவர் கூறினார்.மேலும், நீரை சேமித்து வைப்பதன் மூலம் வறட்சி உள்ளிட்ட நெருக்கடியான காலங்களில் அதை பயன்படுத்த முடியும் என்றும், மேகதாது அணை இல்லாததால் தற்போது உபரிநீர் கடலில் கலந்து வீணாகிறது என்றும் சிவக்குமார் குறிப்பிட்டார். மேகதாதுவில் அணை கட்டி நீரை சேமிப்பதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பயனடையும் என்றும் அவர் தெரிவித்தார்.