தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு; 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் களமிறங்கினர்
தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 1) தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என்று மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்பு பணியை 19 ஆயிரம் அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர். மேலும், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் வீடு தோறும் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளனர். ஒவ்வொரு இல்லத்திற்கும் நேரடியாகச் சென்று, 33 கேள்விகள் அடங்கிய படிவத்தின் மூலம் தேவையான விவரங்கள் பதிவு செய்யப்படும். இந்தியாவில் முதல் முறையாக இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு செல்போன் செயலி மூலம் தகவல்கள் மின்னணு வடிவில் பதிவு செய்யப்படவுள்ளன.1948-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ், சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.சுய-கணக்கெடுப்பு முறையை பயன்படுத்தியவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட சுய-கணக்கெடுப்பு அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காண்பிக்க வேண்டும்.