தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுமா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு: டி.கே. சிவக்குமார்
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதுகுறித்து கர்நாடக அரசு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடத்தியது.இந்தக் கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் கவுரவ் குப்தா, மாநில போலீஸ் டி.ஜி.பி. எம்.ஏ. சலீம், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு, நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார். கடந்த 2016, 2017, 2018 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நல்ல மழை காரணமாக அணைகள் நிரம்பி, தமிழகத்தின் தேவையை விட அதிக அளவு தண்ணீர் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.2025-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 400 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், அதில் பெரும்பகுதி கடலில் கலந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி 3,500 கனஅடி தண்ணீர் திறக்க இயலாது என தெரிவித்து, நீர் திறப்பின் அளவை குறைத்து உத்தரவை ஒத்திவைக்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ததாகவும் விளக்கினார்.ஆனால், தமிழக அதிகாரிகள் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து ஆணையம் தனது உத்தரவை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.தற்போது ஹாரங்கி அணையில் 95 சதவீதம், கபினியில் 83 சதவீதம், கே.ஆர்.எஸ். அணையில் 36 சதவீதம் மற்றும் ஹேமாவதி அணையில் 67 சதவீதம் நீர் இருப்பு உள்ளதாக அவர் கூறினார்.