தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீர் திறக்க பரிந்துரை
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜூன் 15-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்தது. அதன்பின்னர் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், தொடர்ந்து நடந்த ஒழுங்காற்றுக் குழு கூட்டத்திலும் கர்நாடகம் இதே நிலைப்பாட்டை தெரிவித்தது.இதையடுத்து நடைபெற்ற ஆணைய கூட்டத்தில், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த 4.5 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். எனினும், அந்த உத்தரவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் காவிரி நீரின் நிலவரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கர்நாடகத்துக்கு உரிய பரிந்துரைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.ஆகஸ்டு மாதத்துக்கான தமிழகத்தின் பங்கு 45 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.