தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நவம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். அதேபோல், மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு: நவம்பர் 12: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 13, 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். நவம்பர் 15, 16: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களிலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 17, 18: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.