தமிழகத்தில் நவம்பர் 12 முதல் 18-ம் தேதி வரை அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். அதேபோல், மன்னார் வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு: நவம்பர் 12: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 13, 14: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். நவம்பர் 15, 16: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், காரைக்காலிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களிலும் புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும். நவம்பர் 17, 18: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் இதர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும். வெப்பநிலை நிலவரம்: நவம்பர் 12 முதல் 16-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், வெப்பநிலை சற்று உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கான வானிலை: இன்றும் (நவம்பர் 12), நாளையும் (நவம்பர் 13) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேவேளையில், அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் குறிப்பிட்ட நாட்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. - நவம்பர் 12: அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். - நவம்பர் 13, 14: அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. - நவம்பர் 15: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பிற பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசலாம். - நவம்பர் 16: தென்கிழக்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் பிற பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மேற்கண்ட நாட்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.