தமிழக மக்கள் விஜய்க்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியுள்ளனர் - நடிகர் யாஷ்
தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்கள் முதல்-அமைச்சர் விஜய்க்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருப்பது தெளிவாகிறது என்று நடிகர் யாஷ் தெரிவித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா, நயன்தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்நிலையில், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் யாஷ் பேசுகையில், தமிழ்நாட்டு மக்கள் தனக்கு தொடர்ந்து அதிக அன்பை வழங்கி வருவதாக கூறினார். சினிமாவை தமிழ், கன்னடம், தெலுங்கு என பிரித்து பார்க்காமல், அது இந்திய சினிமா என்றே கருத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் யாஷ் கூறினார்.முதல்-அமைச்சர் விஜய் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர் என்றும், அவருக்கு தமிழக மக்கள் தங்களது அன்பை தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், முதலமைச்சராக தனது கடமைகளை செய்வதன் மூலம் மக்களிடம் தனக்குள்ள அன்பை விஜய் வெளிப்படுத்தி வருவதாகவும் யாஷ் தெரிவித்தார்.மக்களுக்கான பணிகளை விஜய் சிறப்பாக மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன், விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றி வருவதாக அடிக்கடி கூறுவார் என்றும் தெரிவித்தார்.விஜய் மீது மக்கள் வைத்துள்ள அன்பை அவருக்காக திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் யாஷ் பேசினார்.