9 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 9) கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரிக்கடல் பகுதியில் இருந்து வடக்கு உள் கர்நாடகம் வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகம் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (அக்டோபர் 9) கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 10 கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம். திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.