சென்னையில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிப்பு: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ஆய்வு
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள கூவம் ஆற்றுப் பகுதியில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கும் சோதனைப் பணியை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் மூன்று வட்டாரங்களிலும் தலா ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கப்படும். இதைத்தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் கொசுக்கொல்லி மருந்து தெளிப்பு மற்றும் கொசுப்புகை மருந்து பரப்பும் பணிகளையும் ஆணையாளர் சமீரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், தலைமை பூச்சித் தடுப்பு அலுவலர் முனைவர் எஸ்.செல்வகுமார், மண்டல அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக மொத்தம் 3,703 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரின் குடியிருப்புப் பகுதிகள் 2,076 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு களப்பணியாளரும் வாரந்தோறும் 500 வீடுகளுக்குச் சென்று கொசு உற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பகுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றை அகற்றுவதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கண்டறியப்படும் கொசு உற்பத்தி இடங்கள் அகற்றப்படுகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் கொசு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.