சென்னையில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிப்பு: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ஆய்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

சென்னையில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிப்பு: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ஆய்வு

சென்னையில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி தெளிப்பு: மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ஆய்வு

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி அருகே உள்ள கூவம் ஆற்றுப் பகுதியில் ட்ரோன் மூலம் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கும் சோதனைப் பணியை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சியின் மூன்று வட்டாரங்களிலும் தலா ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் கொசுப்புழு நாசினி மருந்து தெளிக்கப்படும். இதைத்தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் கொசுக்கொல்லி மருந்து தெளிப்பு மற்றும் கொசுப்புகை மருந்து பரப்பும் பணிகளையும் ஆணையாளர் சமீரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், மாநகர நல அலுவலர் ஜெகதீசன், தலைமை பூச்சித் தடுப்பு அலுவலர் முனைவர் எஸ்.செல்வகுமார், மண்டல அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக மொத்தம் 3,703 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரின் குடியிருப்புப் பகுதிகள் 2,076 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு களப்பணியாளரும் வாரந்தோறும் 500 வீடுகளுக்குச் சென்று கொசு உற்பத்திக்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் வகையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பகுதிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அவற்றை அகற்றுவதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கண்டறியப்படும் கொசு உற்பத்தி இடங்கள் அகற்றப்படுகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரம் மற்றும் கொசு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் கொசு கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் டயர்கள், தேவையற்ற பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்ட தண்ணீர் தேங்கக்கூடிய சிறிய பொருட்கள் அகற்றப்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதைத் தடுக்கும் வகையில், 7,126 புதிய கட்டுமானப் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் 25,035 காலிமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஸ்க்ரப் டைபஸ் நோயை ஏற்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்காக 521 கைத்தெளிப்பான்கள், 49 இயந்திர தெளிப்பான்கள், 132 பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள், 272 கையால் இயக்கப்படும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 200 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 92 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 6 ULV கோல்ட் ஃபாகிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வாராந்திர ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கொசுக்கள் பெருகுவதைத் தடுப்பதுடன், அவற்றின் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதுடன், தேவையற்ற வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.