சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: பிரான்ஸ் வீரர் அலிரெஜா பிரோஸ்ஜா சாம்பியன்
சென்னையில் நடைபெற்ற 4-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியின் 7-வது மற்றும் கடைசி சுற்றில் பல முக்கிய மோதல்கள் அரங்கேறின.புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த பிரான்ஸ் வீரர் அலிரெஜா பிரோஸ்ஜா இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி யை எதிர்கொண்ட கடைசி லீக் ஆட்டத்தில் 41-வது நகர்த்தலில் டிரா செய்தார். வெள்ளைக் காய்களுடன் விளையாடிய உலக சாம்பியனும் தமிழக வீரருமான குகேஷ், அமெரிக்காவின் ஹான்ஸ் நிமான் உடனான போட்டியில் 19-வது நகர்த்தலில் டிராவில் சமநிலை கண்டார்.இந்திய வீரர்களான பிரனேஷ் மற்றும் நிஹால் சரின் மோதலும் டிராவிலேயே முடிவடைந்தது.இறுதிச்சுற்று நிறைவில் அலிரெஜா பிரோஸ்ஜா 4.5 புள்ளிகள் (2 வெற்றி, 5 டிரா) பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
டிமிட்ரி 4 புள்ளிகள் (1 வெற்றி, 6 டிரா) பெற்று 2-வது இடத்தைப் பிடித்தார். இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 4 புள்ளிகள் (2 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி) பெற்று 3-வது இடத்தைப் பெற்றார்.உலக சாம்பியன் குகேஷ் 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு முறையே ரூ.25 லட்சம், ரூ.15 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.