சென்னை ஐகோர்ட்டில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்: சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தனித் தீர்மானம்
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதியும், வேளாண் பட்ஜெட் 6-ந் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. ஆகஸ்டு 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதிலுரை வழங்கினர்.அதன்பின்னர், கடந்த மாதம் 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை கேள்வி-பதில் நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வருகிறார்.இந்த தீர்மானத்தில், சென்னை ஐகோர்ட்டில் தமிழை முதன்மை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மற்றும் ஆவணங்கள், தமிழில் முன்வைக்கப்படும் வாதங்கள் ஆகியவற்றுக்கு உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.அதேபோல், சென்னை ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் ஆகியவற்றை தமிழில் வழங்குவதற்கான தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், இதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.