செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: 25-வது நாளாக சிபிசிஐடி விசாரணை தீவிரம் – மேலும் 5 பேரிடம் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணை 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்று மேலும் 5 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேல் – பவானி தம்பதியினரின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்று இரவு பெற்றோருடன் உறங்கிய சிறுமி, மறுநாள் 12-ஆம் தேதி அதிகாலை திடீரென மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிக விசாரணை மையம் அமைத்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோர், சகோதரி, பாட்டி மற்றும் உறவினர்கள் என குடும்பத்தினர் அனைவரிடமும் ஏற்கனவே தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள போதிலும், சிறுமி இருக்கும் இடம் குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. புவனகிரி, நாமக்கல்லில் கிடைத்த தகவல்கள் இதற்கிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மாயமான சிறுமியை ஒரு பெண் அழைத்துச் சென்றதாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தெரிவித்த தகவல் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், அந்தத் தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, புவனகிரி கடைத்தெருவில் உள்ள சலூனுக்குச் சென்றபோது, ஒரு பெண்ணுடன் இருந்த சிறுமி யாசகம் கேட்டதாகவும், அவருக்கு 100 ரூபாய் வழங்கியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் முரண்பாடான பதில்களை அளித்ததால், அவரது தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால், புவனகிரி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.