விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விசாரணை 25 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இன்று மேலும் 5 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த வடிவேல் – பவானி தம்பதியினரின் இரண்டாவது மகளான 7 வயது சிறுமி, கடந்த 11-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அன்று இரவு பெற்றோருடன் உறங்கிய சிறுமி, மறுநாள் 12-ஆம் தேதி அதிகாலை திடீரென மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையில் 30 போலீசார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆலம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிக விசாரணை மையம் அமைத்து போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். சிறுமியின் பெற்றோர், சகோதரி, பாட்டி மற்றும் உறவினர்கள் என குடும்பத்தினர் அனைவரிடமும் ஏற்கனவே தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள போதிலும், சிறுமி இருக்கும் இடம் குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. புவனகிரி, நாமக்கல்லில் கிடைத்த தகவல்கள் இதற்கிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மாயமான சிறுமியை ஒரு பெண் அழைத்துச் சென்றதாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தெரிவித்த தகவல் போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், அந்தத் தொழிலாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, புவனகிரி கடைத்தெருவில் உள்ள சலூனுக்குச் சென்றபோது, ஒரு பெண்ணுடன் இருந்த சிறுமி யாசகம் கேட்டதாகவும், அவருக்கு 100 ரூபாய் வழங்கியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் முரண்பாடான பதில்களை அளித்ததால், அவரது தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. இதனால், புவனகிரி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி மைய சமையலர் ஒருவர், செஞ்சியில் மாயமான சிறுமியைப் போன்ற தோற்றமுடைய குழந்தையை தத்தகிரி முருகன் கோவில் பகுதியில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது அந்தச் சிறுமியுடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து நாமக்கல் சென்ற சிபிசிஐடி போலீசார், அந்தப் பெண்ணிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் கடலூர், நாமக்கல் மாவட்டங்களில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் சிறுமியைத் தேடி வருகின்றனர். மேலும் பலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடியின் மற்றொரு நண்பரான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஆடு மேய்க்கும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, சிறுமி மாயமானது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், ஆலம்பூண்டியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பண்ருட்டியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரையும் விசாரணை மையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. உண்மையிலேயே கரும்பு வெட்டும் வேலைக்காகத்தான் ஆலம்பூண்டிக்கு வந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்தனர். இதுதவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுமியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆலம்பூண்டியைச் சேர்ந்த மேலும் 5 பேரிடம் டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான குழுவினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே 13 லாரி ஓட்டுநர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமி மாயமாகி 25 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காததால், தேடுதல் பணியும் விசாரணையும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் சிபிசிஐடி டிஎஸ்பி கீதாவிடம் கேட்டபோது, விரைவில் தகவல் தெரிவிப்பதாக அவர் கூறினார்.