சுபமுகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக குண்டுமல்லி கிலோ ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்டது. சேலம் கடைவீதி பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுபமுகூர்த்த நாளும், நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெற உள்ள நிலையில், நேற்று பூக்களின் விலை திடீரென உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.600 வரை விற்பனையான குண்டுமல்லி நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.400 வரை விற்ற சன்னமல்லி ரூ.1,300-க்கும், ரூ.280 வரை விற்பனையான ஜாதிமல்லி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.