சுபமுகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக குண்டுமல்லி கிலோ ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்டது. சேலம் கடைவீதி பகுதியில் உள்ள வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுபமுகூர்த்த நாளும், நாளை (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெற உள்ள நிலையில், நேற்று பூக்களின் விலை திடீரென உயர்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.600 வரை விற்பனையான குண்டுமல்லி நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது. அதேபோல் ரூ.400 வரை விற்ற சன்னமல்லி ரூ.1,300-க்கும், ரூ.280 வரை விற்பனையான ஜாதிமல்லி ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது. காக்கட்டான், கலர் காக்கட்டான், மலை காக்கட்டான் ஆகியவை கிலோ ரூ.400-க்கும், அரளி ரூ.240-க்கும் விற்பனையானது. வெள்ளை அரளி, மஞ்சள் அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை தலா ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், நந்தியாவட்டம் ரூ.450, சிந்தியாவட்டம் ரூ.800, சாமந்தி ரூ.500, சாதா சம்பங்கி ரூ.600 என விலை நிர்ணயிக்கப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்தபோதிலும், வ.உ.சி. பூ மார்க்கெட்டில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. விலை உயர்வு காரணமாக பலரும் தேவையான அளவு மட்டுமே பூக்களை வாங்கிச் சென்றனர். விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர்ந்து வரும் சுபமுகூர்த்த நாட்களை கருத்தில் கொண்டு, பூக்களின் விலை மேலும் சில நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.