சியான் 63' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
'வீர தீர சூரன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் தனது 63-வது படத்தின் பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, 'இருமுகன்' இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். தற்காலிகமாக 'சியான் 63' என அழைக்கப்படும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
மலையாளத் திரைப்படமான 'சர்வம் மாயா' மூலம் கவனம் பெற்ற ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவருடன் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும், 'வீர தீர சூரன்' படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள்தான் ரியா ஷிபு என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தக் கதாபாத்திரத்திற்காக விக்ரம் தனது உடலமைப்பில் கணிசமான மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரது புதிய தோற்றம் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.அண்மையில் படத்தின் பூஜை நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.