"சிம்புவோட அம்மா இல்ல... சந்திராதான்' - அரசன் அப்டேட் கொடுத்த ஆண்ட்ரியா
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்'திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்கு நடிகை ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.இதற்கிடையில், படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சிறுவயது சிம்புவின் தாயாக ஆண்ட்ரியா நடிப்பார் என்றும், அதன் பின்னர் கதாநாயகன் கேங்ஸ்டராக உருவெடுக்கும் வகையில் கதை நகரும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.இந்த தகவல்களுக்கு தற்போது ஆண்ட்ரியா நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் சிம்புவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த படத்தில் நான் 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில்தான் வருகிறேன்" என்று கூறினார்.குறிப்பாக, தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயரும் 'சந்திரா' என்பதும் குறிப்பிடத்தக்கது.