கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரியத்தோடு நீண்ட காலமாக தொடர்புடைய சிலம்பம், தற்காப்புக் கலையாகவும் உடற்பயிற்சியாகவும் தொடர்ந்து பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. முன்பு கிராமப்புறங்களில் அதிகளவில் பயிற்சி பெறப்பட்ட சிலம்பம், தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. உள்ளூர் போட்டிகள் முதல் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் வரை சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். உடல் வலிமை, வேகம், சுறுசுறுப்பு, கவனம் மற்றும் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதிலும் சிலம்பப் பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு இது சிறந்த தற்காப்புக் கலையாகவும் பயன்படுகிறது. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 24 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
போட்டியின் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடிய அவர்கள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து தங்கப் பதக்கம் வென்ற மாணவி ஒருவர் கூறுகையில், “சிலம்பம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தற்காப்புக் கலை. உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கும் இது உதவுகிறது. கோவாவில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் எங்கள் குழுவில் 24 பேர் பங்கேற்றோம். அதில் 21 பேர் ஒற்றை சிலம்பப் போட்டியிலும், 3 பேர் இரட்டை சிலம்பப் போட்டியிலும் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது ஆசிய போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அந்தப் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே எங்கள் நோக்கம்” என்றார்.