Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்களை விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்களை விரிவுபடுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மருத்துவச் செலவுகளுடன், பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ளும் நிலை உள்ளது. இத்தகைய சூழலில், நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் வழங்குவதற்கான போதிய கட்டமைப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் சிறுநீரக நோய் மற்றும் செயலிழப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களில் தெலுங்கானா, கோவா, ஒடிசா, கேரளா ஆகியவற்றுக்கு அடுத்ததாக தமிழ்நாடு 5-வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் சராசரி விகிதம் 3.20 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 4.30 சதவீதமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்விலும் தமிழ்நாட்டில் நிலைமை மேலும் கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 8.40 சதவீதம் பேருக்கு 3-ம் நிலை அல்லது அதற்கு மேற்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 6.90 சதவீதம் பேர் 3-ம் நிலையிலும், 1.2 சதவீதம் பேர் 4-ம் நிலையிலும், 0.30 சதவீதம் பேர் 5-ம் நிலையிலும் இருந்தனர். 3-ம் நிலை பாதிப்பில் சிறுநீரகத்தின் செயல்பாடு 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என்றும், 5-ம் நிலையை அடைந்தவர்களின் சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்துவிடும் என்றும் சிறுநீரக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நிலையில், அவர்களில் 40 சதவீதம் பேர் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். உடல் பருமன், அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், புகைப்பழக்கம், தினமும் 10 கிராமுக்கு மேல் உப்பு உட்கொள்வது உள்ளிட்டவை சிறுநீரக பாதிப்புக்கான முக்கிய காரணிகளாக உள்ளன. இரவு நேரங்களில் பிரியாணி, ஃபிரைட் ரைஸ் போன்ற துரித உணவுகளை சாப்பிடுவது, தெருவோர உணவகங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்வது போன்றவையும் சிறுநீரகங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முதல் வாரத்திற்கு மூன்று முறை வரை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இதற்குத் தேவையான அளவுக்கு டயாலிசிஸ் மையங்கள் இல்லை.

Advertisement
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகள், வட்டம் சாராத மருத்துவமனைகள், நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் என 146 அரசு மருத்துவமனைகளில் 1,395 டயாலிசிஸ் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்மூலம் 2025-26ஆம் ஆண்டில் 9,471 பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. இதனால் பெரும்பாலான சிறுநீரக நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை நாடி டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஒரு டயாலிசிஸ் அமர்வுக்கு ரூ.2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. ஏற்கனவே வருவாய் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இதனால் கடுமையான கடன் சுமைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. சிலரால் தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்ள முடியாத சூழலும் உருவாகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பை கட்டுப்படுத்தவும், நோயாளிகளின் பொருளாதாரச் சுமையை குறைக்கவும் இரண்டு முக்கிய நடவடிக்கைகள் அவசியம். முதலில், சிறுநீரக செயலிழப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு, சிறுநீரக பாதிப்புக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கும் உணவுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச டயாலிசிஸ் கிடைக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அதற்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும். தற்போது 146 மருத்துவமனைகளில் மட்டுமே டயாலிசிஸ் சேவை உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் டயாலிசிஸ் மையங்களை அமைக்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டபோதும், அது இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, முதற்கட்டமாக மொத்தம் 500 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் 36, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 37, வட்ட மருத்துவமனைகள் 199, வட்டம் சாராத மருத்துவமனைகள் 59, நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் 39 என அனைத்து இடங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் செயல்பட்டால், அவற்றின் எண்ணிக்கை 370 ஆக உயரும். இதனுடன் கிராமப்புறங்களில் உள்ள 130 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்பட்டால் மொத்த எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள 196 மையங்களைத் தவிர்த்து புதிதாக 304 மையங்களை அமைக்க, அனைத்து செலவுகளையும் சேர்த்து ரூ.608 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும், தேவையான இடங்களில் பிற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குறைந்தபட்சம் ஒரு டயாலிசிஸ் இயந்திரத்தையாவது அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு