காரிய பூனை போல நடந்தது திமுக; காவிரி விவகாரத்தில் தவெக கடும் விமர்சனம்
த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளது.அந்தப் பதிவில், விவசாயிகளின் நலனையும் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதே மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியின் அடையாளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக மீது சுயநல அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மேலும், பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருந்தபோதும், காவிரி பிரச்சினைக்காக ஒருமுறையாவது அமைச்சர் பதவியை துறந்ததுண்டா என்றும், நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த தீவிர முயற்சி எடுத்ததுண்டா என்றும் திமுகவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பதவியை பாதுகாப்பதிலேயே அந்தக் கட்சி அக்கறை காட்டியதாகவும் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.ஆட்சியில் இருந்த காலத்தில் காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்த திமுக, ஆட்சியை இழந்த பிறகு மட்டும் மண், மொழி, மானம் உள்ளிட்ட கோஷங்களை முன்வைத்து அரசியல் செய்கிறது என்றும், மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் அந்தப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள திமுக, தற்போது காவிரி பிரச்சினையை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிப்பதாகவும், இதுபோன்ற அணுகுமுறையை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் த.வெ.க.
தெரிவித்துள்ளது.அத்துடன், காவிரி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசாமல், மக்கள் நலனை முன்னிறுத்தி உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய முடியுமா என்ற கேள்வியையும் அந்தப் பதிவில் எழுப்பியுள்ளது.இவ்வாறு த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.