காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

காதலில் ஏமாற்றப்பட்டு மனதளவில் உடைந்தேன் – நடிகை ரெஜினா கசாண்ட்ரா

காதல் உறவில் ஏற்பட்ட துரோகம் தன்னை மனதளவில் கடுமையாகப் பாதித்ததாகவும், அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் தேவைப்பட்டதாகவும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்தும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மாநகரம்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’, ‘மிஸ்டர் சந்திரமவுலி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘செக்சன் 108’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அஜித்துக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வரும் ரெஜினா, பிரபல இயக்குநர் மதுர் பந்தார்க்கரின் ‘தி வைவ்ஸ்’ திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், துரோகம் மற்றும் பெண்கள் சந்திக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது தனது காதல் உறவு 2020-ம் ஆண்டிலேயே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அனுபவம் தன்னை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்தார். காதல் உறவில் கடுமையாக ஏமாற்றப்பட்டதால் மனதளவில் முற்றிலும் சோர்ந்து போனதாகவும் கூறினார். மேலும், அந்தத் துரோகத்திற்குப் பிறகு சில காலத்திற்கு எந்தவொரு காதல் உறவிலும் ஈடுபட வேண்டாம் என முடிவு செய்ததாகவும், தனது நேரத்தையும் கவனத்தையும் தனக்காகவே செலவிட விரும்பியதாகவும் தெரிவித்தார். அதே சமயத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதால், கிடைத்த காலத்தைத் தன்னை கவனித்துக் கொள்வதற்கும் சுய அன்பை வளர்த்துக் கொள்வதற்கும் பயன்படுத்தியதாகக் கூறினார். இன்று மனதளவில் தெளிவான நிலையை அடைந்திருப்பதற்கு அந்தக் காலகட்டம் முக்கியக் காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் குறித்துப் பேசிய ரெஜினா, பல பெண்கள் தங்களது வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தவறான தொடுதல் உள்ளிட்ட விரும்பத்தகாத அனுபவங்களைச் சந்தித்திருப்பதாகக் கூறினார். தோழிகளுடன் இதுகுறித்துப் பேசும்போதுதான், இத்தகைய சம்பவங்கள் பல பெண்களின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை உணர முடிந்ததாகத் தெரிவித்தார். அதேபோல், காதல் உறவுகளில் ஏற்படும் ஏமாற்றங்களும் பல பெண்கள் சந்திக்கும் பொதுவான அனுபவங்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற பாதிப்புகள் தனக்கு மட்டுமே நேர்ந்துவிட்டதாகப் பெண்கள் நினைத்து வருந்த வேண்டாம் என்றும், தங்களது அனுபவங்களை மற்ற பெண்களுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வாழ்க்கையில் ஏதேனும் இழப்பைச் சந்திக்கும்போது துக்கப்படுவது இயல்பானது என்று கூறிய ரெஜினா, அழுகை வந்தால் அதை அடக்காமல் மனம் திறந்து அழ வேண்டும் என்றார். தங்களது உணர்வுகளுக்காகத் தங்களைத் தாங்களே குறை கூறவோ, ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறோம் எனச் சந்தேகப்படவோ தேவையில்லை என்றும் தெரிவித்தார். வலியை ஏற்படுத்திய சம்பவத்திலிருந்து மீண்டு வருவதற்கு முதலில் தனக்குத் தேவையான அன்பையும் அக்கறையையும் தானே வழங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தினார். திரைத்துறையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா கால்பதித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது இந்த வெளிப்படையான பேச்சு கவனம் பெற்றுள்ளது.