கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. குறிப்பாக, நாகல்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கள்ளக்குறிச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட துருகம் சாலையில் உள்ள நாகல்குடி பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வெளியேற முடியாமல் சாலையில் குளம்போல் தேங்கியது. இதன் காரணமாக பள்ளிக்குச் சென்ற மாணவர்களும், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களும் தேங்கியிருந்த இடுப்பளவு தண்ணீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தண்ணீரில் நடக்க முடியாமல் சிரமப்பட்ட சிறுமி ஒருவரை, சிறுவன் ஒருவர் தூக்கிக்கொண்டு சாலையைக் கடந்து சென்றார்.
Advertisement
இந்த நெகிழ்ச்சியான காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கே. பிரகாஷ் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆகியோர் நகர நிர்வாக அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும், கழிவுநீர் கால்வாய்களை முறையாகத் தூர்வாரி நீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர். இதற்கிடையே, குடியிருப்புப் பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ள குடியிருப்புவாசிகளும் பெற்றோர்களும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.