15 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 4.5 கி.மீ. உயரத்திலும், குமரிக்கடல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரையிலும் வளிமண்டலச் சுழற்சிகள் காணப்படுகின்றன. மேலும், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை உருவாகியுள்ளது.