தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்துக்கு உட்பட்ட A. கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கலிங்கப்பட்டி மற்றும் செவல்குளத்தை தலைமையிடங்களாகக் கொண்டு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களை அமைக்க வேண்டும் என துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேற்று (09.09.2026) மாலை 7 மணியளவில் நேரில் சந்தித்த துரை வைகோ, கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார். அதில், பொதுமக்களின் நலன் மற்றும் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு, கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தைப் பிரித்து கலிங்கப்பட்டி, செவல்குளம் ஆகிய இடங்களில் புதிய அலுவலகங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
துரை வைகோவின் கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போது மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 2027ஆம் ஆண்டில் இந்தக் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக துரை வைகோ தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோரிக்கையை பரிசீலித்து உறுதியளித்த அமைச்சருக்கு துரை வைகோ நன்றி தெரிவித்தார்.