கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக. 25) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினார்.கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
அதில், அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.இந்த சம்பவம் குறித்து உயர்நிலை நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தினார். மேலும், இதுதொடர்பாக கர்நாடக முதல்-மந்திரியிடம் இருந்து தமிழக அரசுக்கு ஏதேனும் தகவல் கிடைத்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.3 தமிழர்கள் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு அவர்களின் குடும்பங்களுக்கு முழுமையான ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.